என்ன செய்யப்போகிறார் தினகரன் ?

என்ன செய்யப்போகிறார் தினகரன் ?
Published on

சட்டமன்றத்தில் தங்கத் தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ.வால் புன்னகை மன்னன் என்று புகழப்பட்ட அதிமுகவின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் திட்டங்கள் என்ன? முதல்வர் எடப்பாடிக்கும் தினகரனுக்குமான மோதல் என்ன ஆகும்? ஆட்சிக்கு ஆபத்தா? என்று பல்வேறு மட்டங்களில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஜெயலலிதாவின் மரணத்தை ஒட்டி நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளால் அதிமுக என்னும் கட்சி கலகலத்துப் போயிருக்கிறது. அதிமுகவின் பொதுச்செயலாளர் சிறையில் இருக்கையில் துணைப்பொதுச்செயலாளரும் தேர்தல் ஆணையருக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றச்சாட்டில் குறிவைக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டபோது அதிமுக தொண்டர்கள் நொந்துபோனார்கள்.

“வேறு ஒருவராக இருந்தால் நொறுங்கிப் போயிருக்கலாம். ஆனால் தினகரன் இதுபோன்ற பலவிஷயங்களைப் பார்த்தவர் என்பதால் இன்னும் புன்னகை மாறாமல் எல்லாப் பிரச்சனைகளையும்  எதிர்கொள்கிறார்.  கட்சியும் ஆட்சியும் ஒழுங்காகப் போய்க்கொண்டிருக்கின்றன. எதையும் அவர் சீர்குலைக்க விரும்பவில்லை. அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாக இணைய சசிகலா குடும்ப ஆதிக்கம் தடையாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட போது அவர் கட்சிச்செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். அதிலேயே அவருக்கு பெரும் ஆதரவு உருவானது. ஆனால் அதற்குப் பின்னால் பல மாதங்கள் ஆகியும்  இரு அணிகளும் இணைவதாகத் தெரியவில்லை. எனவே அவர் அறிவித்தது போல ஆகஸ்ட் 5 அன்று முதல் கட்சிப்பணிகளைக் கவனிக்கத்தொடங்குவார்,” என்று கூறுகிறார் தினகரன் ஆதரவாளர் ஒருவர்.

 ஓபிஎஸ் தலைமையிலான அணியினரின் இரண்டு முக்கியமான கோரிக்கைகள் இவை: கட்சியிலிருந்து சசிகலா குடும்பம் விலக்கி வைக்கப்படவேண்டும்; ஜெவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும். இவ்விரண்டு கோரிக்கைகளில் சசிகலா குடும்ப உறுப்பினர்களை விலக்கி வைப்பதில் எடப்பாடி தலைமையிலான அணியினர் சற்று முனைப்புக்காட்டினர். சிறையில் இருக்கும் சசிகலாவை எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனபின்னர் சென்று பார்க்கவில்லை. ஒரு தரப்பு அமைச்சர்கள் மட்டுமே சென்று பார்த்தனர். அதன் பின்னர் அவர்களும் செல்லவில்லை.  அவர் மீது சமீபத்தில் சிறையில் சலுகைகள் பெறுவதாகக் குற்றச்சாட்டு வந்தபோதுகூட அமைதியாக இருந்தனர். கட்சிப்பத்திரிகையான நமது எம்ஜிஆரும், தொலைக்காட்சியான ஜெயா டிவியும் இன்னும் சசிகலா - தினகரன் கட்டுப்பாட்டில் இயங்குவதால் இவ்விரு ஊடகங்கள் மட்டுமே சசிகலாவுக்கான ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துப் போராடின. தினகரன், ‘சசிகலா பெற்றிருப்பது சாதாரண தண்டனையே. அதில் சீருடை அணியாமல்  இருக்கலாம். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை,” என்று தனக்கே உரிய பாணியில் இதைச் சமாளித்தார். ஆனால் ஆளும் அதிமுக அரசுக்கு இது பெரிய தர்மசங்கடமே. இச்சமயத்தில் கட்சிப்பத்திரிகையான நமது எம்ஜிஆரில் முதல்வர் பற்றிய செய்திகள் வராமல் புறக்கணிக்கப்பட்டது பெரும் பிரச்சனையாக உருவெடுத்தபோது, ‘சின்னம்மாவுக்கு ஏற்பட்ட பிரச்சனையை சமாளிப்பதில் கவனம் செலுத்தியதால் அப்படி நேர்ந்தது’ என்று சொல்லப்பட்டு, பழையபடி எடப்பாடி இப்போது இடம்பெறுகிறார்.

 இன்றைக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்  என 36 பேர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். அவர்களில்  கொஞ்சம் பேர் பல்வேறு காரணங்களால் இணைந்திருந்தாலும் 23 பேர் வலுவாக அவரை ஆதரிப்பதாகவும் அவர்களைப் பயன்படுத்தியே எடப்பாடி அரசின் லகானை தினகரன் கையில் வைத்திருப்பார் என்றும் சொல் கிறார்கள்.  அவர்களிடம் கையெழுத்துகள் கூட வாங்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மூன்று தமிழக அமைச்சர்கள் மீது தினகரன் தரப்பும் கோபத்தில் உள்ளது.  அதிமுக அம்மா அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும்போது அதில் பொதுச்செயலாளர் சசிகலா என்றே குறிப்பிடப்படுவதையே இணைப்புக்கு ஓபிஎஸ் அணிக்கு முட்டுக்கட்டையாகச் சுட்டிக்காட்டுகிறது. அதையும் எடுத்தால் என்ன என்று இவர்களில் பொறுப்பான ஒரு அமைச்சர் கருத்து தெரிவித்ததும் ரசிக்கப்படவில்லை! 

“ஆகஸ்ட் 5 ஆம் தேதி என்பது துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கும் நாள். ஏற்கெனவே அதிமுகவின் மூன்று அணிகளும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு தெரிவித்தன. துணைக்குடியரசுத் தேர்தலிலில் வெங்கையா நாயுடுவுக்கும்  ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றன. பாஜக வைப் பொறுத்தவரை குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தபின்னர் தமிழகம் மீது முழுக்கவனமும் திருப்பும். ஒபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் பாஜகவின் ஆதரவு உள்ளது.  கட்சிப்பிரச்சனைகளில் கூட பிரதமரிடம் ஆலோசனை கலப்பதாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் அந்த அளவுக்கு தினகரன் மீது பாஜகவுக்குப் பாசம் இல்லை. இச்சூழலில்  வழக்குகளை எதிர்கொள்ளும் தினகரன் ஆகஸ்ட் 5க்குப் பின்னால் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக எதிர்நோக்குகிறார்கள். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வழக்கம் பல ஆண்டுகளாக அரசியலில் புழக்கத்தில் உள்ளது. ஓபிஎஸ்ஸுடன் வெளிப்படையாக பிளவு இருந்தாலும் அவருடன் தினகரனுக்கு உள்ளார்ந்த நட்பு உள்ளது என்பதை மறக்கக்கூடாது,” என்று பொடி வைக்கிறார்  அரசியல் விமர்சகர் ஒருவர்.

மத்தியில் ஆளும் பாஜகவிடம் இவ்வளவு நெருக்கம் காட்டும் ஆளுங்கட்சித் தரப்பு, தமிழகத்தின் ஜிஎஸ்டி, நீட், மீனவர் பிரச்னை போன்றவற்றில் தேவையான உதவிகளைப் பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்பதும் இன்னொரு தரப்பின் கருத்தாக உள்ளது.

ஆகஸ்ட், 2017.

logo
Andhimazhai
www.andhimazhai.com